ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்துச் செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால், அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பலரும் ஆன்மிகச் சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி, அவரது எழுத்துகளை ஆராதித்து வரும் வேளையில், அவரது மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டுவிட்டது. அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல என்பதுடன், மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வாரப் பத்திரிகையை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிகை இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் மீறப்பட்டு உறவின் ஒழுக்கக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்தத் தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும், தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓராண்டுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர்கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம்பட்டு ஒரு மரக்கிளையைப் பிடித்து எழ முடியாமல் திணறியபோது மனிதாபிமான முறையில் அவரைக் காப்பதைவிட படம்பிடிப்பதில் முனைப்பாக இருந்ததை மறந்திருக்க முடியாது.
தொலைக்காட்சியில்வெவ்வேறு பெயரில் ஒளிபரப்பும் நிகழ்வில்கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசூக்காக சொன்ன அந்தக்காலப் பாடல்கள் இல்லாமல், பாடும் குழந்தையின் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை, பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழ்ந்து, தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.
பத்திரிகைச் சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்குப் பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும், மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்க்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment