Thursday 18 March 2010

"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'

பழைய நாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள். குளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ஓர் அன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர் பாடல்களையும் தேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள். வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித் தின்றுவிட்டு கோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற இறைப்பணிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆண்டிப் பண்டாரம் என்று பெயர். அவர்களுக்கு மதிப்புண்டு.

இன்று அதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்பதற்கு மாறாக "அத்தனைக்கும் ஆசைப்படு' என்று வேறு போதிக்கிறார்கள். விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை கோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே நினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற கதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.

அன்றைக்குச் சாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை. இன்று சாமியார்களின்மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின் படியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன? அரசுகளுக்கு விலையும் உண்டு; கொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.

No comments:

Post a Comment